வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஸ்ரீ தேவர் கைதானவுடன் நடந்த அதிசயங்களும் சோகங்களும், நெஞ்சை உருக்குலைக்கும் உண்மைச் சம்பவங்கள்

தேவர் விடுதலை கோரி மக்கள் கிளர்ச்சி: 1957ல் காங்கிரசால் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் ஸ்ரீ தேவர் கைது செய்யப்பட்டு
13.PASUMPON_MUTHU_RAMALINGA_THEVAR
பல்வேறு குற்றங்களுக்குக் காரணம் சொல்லப்பட்டார். தேவர் தான் குற்றவாளி இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறித் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்தார். பின் “இக்குற்றங்களில் தேவர் ஈடுபட்டிருப்பாரா? என்று சந்தேகிக்கக் கூட இடமில்லை” என்று நீதிபதி கூற நீதிதேவதையால் தேவர் விடுதலை செய்யப்பட்டது வேறு. இப்போதிருக்கும் மதுரை, கோரிப்பாளையம் ஸ்ரீ தேவர் சிலை உள்ள இடத்தில் தான் பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்டார். தான் அணிந்திருந்த ருத்ராட்ச மாலைகளை உடனிருந்த டி.ஜி.கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்துவிட்டு, “மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள், அஞ்ச வேண்டாம், சத்தியம் வெல்லும்” என்று கூறி போலீஸ் வேனில் ஏறிக்கொண்டார் தேவர் திருமகன். செய்தி காட்டுத்தீ போல பரவியது. மாபெரும் கிளர்ச்சி உருவானது; எரிமலையென வெடித்துக் கிளம்பியது மக்கள் கூட்டம். ஆனால் ஸ்ரீ தேவருக்குப் பாத்தியப்பட்டவர்களான ஜனநாயக காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீ தேவரின் வார்த்தைகளான “எவனொருவன் பலாத்காரத்தில் ஈடுபடுகிறானோ, அவன் என் இருதயத்தைப் பிளந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்” என்பதைக் காரணம் சொல்லி மக்கள் மத்தியில் வன்முறை வெடிக்காமல் காத்தனர். ஆனால் அவ்வழக்கில் தேவர் சிறையிலிருந்த போது மக்கள் பெரும் வேதனையில் இருந்தனர். அவர்கள் பல்வேறு அற மற்றும் வீரப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவற்றில் சில துணுக்குகள்:
  • தேவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் எந்த மந்திரியும், முதல் அமைச்சர் காமராஜர் உட்பட தென்பாண்டி மண்டலத்திற்குள் நுழையவே முடியவில்லை.
  • மதுரையில் காமராஜர் கார் மீது செருப்பு வீசப்பட்டது.
  • சிவகாசி பக்கத்தில் பூவநாதபுரம் என்ற கிராமத்தில் மந்திரி சி.சுப்பிரமணியத்தை மேடையில் ஏறியே முகத்தில் சாணி அடித்தனர். அவரது மூக்குக் கண்ணாடி உடைக்கப்பட்டது.
  • மந்திரி ராமையாவுக்கு ராஜபாளையத்தில் கருப்புக்கொடியோடு கல்லெறி நடந்தது.
  • நாடெங்கும் தேவர் விடுதலை கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன.
  • எங்கு பார்த்தாலும் ஜனநாயக காங்கிரசின் மஞ்சள் கொடியும் ஃபார்வர்டு பிளாக்கின் புலிக்கொடியும் பறந்தன, காங்கிரஸ் மிரண்டது.
  • ஆலயங்கள் தோறும் தேவர் விடுதலைக்கு வழிபாடுகள் நடந்தன.
  • வீடுகள் தோறும் பிரார்த்தனைகள் நடந்தன.
  • ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் தேவர் விடுதலைக்குப் பிரார்த்தனை செய்து தாடி வளர்த்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தமிழகமெங்கும் தாடி வளர்த்தவர்களை ஒன்று திரட்டி “தாடி வளர்ப்போர் மாநாடு” ஒன்றை ஜி.எம்.கணபதி நடத்தினார். இதில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தாடியுடன் கலந்து கொண்டனர். (இம்மாநாடு பற்றிய முழுக்கட்டுரை முன்னரே நமது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை வாசிக்க <<<கிளிக் செய்க>>>)
  • தேவர் விடுதலை ஆகும் வரை இல்லற வாழ்வில் ஈடுபடுவதில்லை என்று இல்லறத்திலேயே துறவறம் பூண்டு, சதா இறைவனடி வேண்டி நின்று தவம் புரிந்து வந்த தம்பதிகள் ஆயிரம் ஆயிரம்.
  • ஒரு வேளை உணவு மட்டும் உண்டு தேவர் விடுதலைக்காகப் பிரார்த்தணை செய்த சிறுவர் சிறுமியர் ஏராளம்.
  • பல இடங்களில் யாகங்கள் நடத்தப்பட்டன.
  • அனைத்து தெய்வங்களின் ஆலயங்களிலும் குறிப்பாக முருகன் கோவில்களில் எல்லாம் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஊர்வலமாகச் சென்று மனமுருகி வேண்டினர்.
  • திருப்பரங்குன்றம், பழனி போன்ற இடங்களில் சந்நியாசிகள் காவி உடையுடனும் ருத்ராட்ச மாழையுடனும் ஊர்வலம் நடத்தி தேவர் விடுதலைக்காகப் முருகனைப் பிரார்த்தனை செய்தனர்.
  • தேவர் கைது செய்யப்பட்டவுடன் அதிர்ச்சியில் இறந்தவர்கள் 14 பேர்.
  • தேவர் கைதானவுடன் துயரம் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் 12 பேர்.
  • மேலும் ஸ்ரீ தேவர் கைதை எண்ணி மூளை கலங்கிப் பைத்தியம் போல் தேவரைப் பற்றியே புலம்பிக் கொண்டு தெருவிலேயே திரிந்தவர்கள் பலர்.
ஆதாரம்: ஏ.ஆர்.பெருமாளின் “முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்” புத்தகம்
இவையனைத்தும் 100% உண்மைகளே. இவற்றிற்கான சான்றை ஸ்ரீ தேவர் உடனிருந்தவர்களின் அனுபவத்தில் உருவான புத்தகங்களே கூறுகின்றன. இப்பேர்ப்பட்ட அதிசயங்கள் தமிழகத்திலில்லை, இந்தியாவிலில்லை, உலகில் வேறு எந்தத் தலைவருக்காகவும் நடந்துள்ளனவா? ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். “சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்” என்று கூறிய தெய்வத்தின் சிலையைத் தான் இன்று சில தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சேதப்படுத்துகின்றனர். அரிஜனங்களின் வீட்டில் விரும்பி உணவு உண்ட சாமியைத்தான் இன்று தாழ்த்தப்பட்ட நண்பர்கள் சிலர் வெறுப்பாகப் பார்க்கின்றனர். “நாங்களும் வருவோம், முடிந்தால் தடுத்துப்பார்” என்று கூறி தலித்துகளைத் தன் தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்ற கடவுளைத் தான் இன்று சில தாழ்த்தப்பட்ட தோழர்கள் சாதி வெறியர் என்கின்றனர். (அதுவரை தாழ்த்தப்பட்டோர் கோவிலினுள் செல்ல அனுமதி இல்லை). “அடியேனுடைய தலைத் தோலை உங்களுக்குச் செருப்பாகத் தந்தாலும் உங்கள் நன்றிக்கு ஈடாகாது” என்றுரைத்த மகானைத் தான் இன்று சிலர் இழிவு படுத்துகின்றனர். இப்பதிவை எழுதும் போதே என் கண்களில் நீர் கொட்டுகிறது. இதைப் படித்த பின்பும் ஸ்ரீ பசும்பொன் சித்தரை ஒருவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால் உண்மையில் அவர் மனிதப் பிறவியா என்பது ஐயமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக